Monday, June 7, 2010

மாறுவேடத்தில் வந்து கவிதையை ரசித்த ரஜினி!

கோடைத் திருவிழாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கவிஞர் வைரமுத்துவின் கவியரங்கத்தை சூப்பர் ஸ்டார் மாறுவேடத்தில் வந்து கண்டுகளித்து சென்றதாக இன்றைய தினத் தந்தி கூறியதாவது ...

தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் அங்கே ஒரு செயற்கை தாஜ்மகால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்க்க ஆவலுடன் நிறையப் பேர் வருகிறார்கள்.

அதைப் பார்க்க விரும்பியவர்களுள் ரஜினியும் ஒருவர். ஆனால், தாஜ்மகாலைப் பார்க்கப் போகும் தன்னைப் பார்க்க பெரும் கூட்டம் கூடி, சூழ்நிலை கெட்டுவிடுமே என்பதால், சமீபத்தில் அங்குபோனபோதுகூட அய்யன் அருவியை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பினார்.

இந்த நிலையில், சமீபத்தில் கவிஞர் வைரமுத்து தலைமையில் அந்த தாஜ்மகாலில் ஒரு காதல் கவியரங்கம் நடந்தது. தமிழக அரசின் சுற்றுலாத்துறைதான் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

தாஜ்மகால் மீது அழகான மேடை… அதில் முகலாயர் கால ஸ்டைலில் வெள்ளைத் திண்டுகள். மேடையில் கவிஞர் வைரமுத்து அமர்ந்திருக்க, காதல் கவியரங்கம் தொடங்கியது.

நல்ல கூட்டம். தாஜ்மகால் நிரம்பி வழிந்தது. பெரும்பாலும் இளைஞர்கள்.

அதில் ஒரே ஒரு முதியவர் மட்டும் வித்தியாசமாக தெரிந்தார். தள்ளாத வயது, நரைத்த தலை, கூரிய பார்வை. கவியரங்கத்தின் மீதே கண்ணும் காதும் வைத்து லயித்து இருந்தார்.

வைரமுத்துவின் கவிதை வரிகள் மழையாய் விழுந்தன. வரிக்கு வரி கூட்டம் கைத்தட்ட, அந்த வயதான முதியவர் மட்டும் அடிக்கடி தலையாட்டினார். தாடியை தடவியடி சிரித்துக்கொண்டார்.

“இதுதான் காதலுக்கு சிந்தப்பட்ட உயரமான கண்ணீர்த்துளி” என்ற வரியையும், “கண்மணியை உள்ளே புதைத்துவிட்டு வெள்ளை விழி மட்டும் வெளியே தெரிகிறது” என்ற வரியையும் ஆரவாரத்தோடு சபை ரசித்தபோது, அவரும் ரசித்தார்.

“யமுனையை விட கூவம் தாஜ்மகாலே கொடுத்து வைத்தது…

யமுனை வற்றிவிடும்…கூவம் வற்றாது”

-என்று வைரமுத்து கவிதை சொன்னபோது எழுந்த சிரிப்பின் அலைகளில், முதியவரும் மிதந்தார்.

கவியரங்கம் முடிந்தது. தடியை ஊன்றிக்கொண்டே முதியவர் கூட்டத்தில் கரைந்து காணாமல் போய்விட்டார்.

அந்த முதியவர் வேறு யாருமல்ல. ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த்!!

நேரடியாக வந்தால் பரபரப்பு ஏற்படும் என்பதால், ரஜினிகாந்த் மாறுவேடத்தில் மின்னலாய் வந்து ரசித்துவிட்டுப் போனார்.

யாரும் அவரை அடையாளம் காண முடியவில்லை. அவரை அறிந்துகொண்டவர் ஒரே ஒரு அதிகாரி.. அவரும் காட்டிக் கொடுக்கவில்லை.

அடுத்தமுறை ஏதேனும் விசேஷ கூட்டங்களில், நிகழ்வுகளில் உங்கள் பக்கம் நிற்பவரை எதற்கும் உற்றுக் கவனியுங்கள்… உங்கள் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறவும் வாய்ப்புள்ளது!!

No comments:

Post a Comment